நூல்:- தென்றல் தீண்டாத நந்தவனங்களுக்கு
எழுத்தாளர்:- சதேவா
விலை:-120 ரூபாய்
சதேவா அவர்களுடைய படைப்புக்களில் இது நான்காவது பெட்டகமாகும். இந் நூலின் என்னுரையில் தனது மனக் குமுறல்கள், வேதனைகள் போன்றவற்றை ரெளத்திரம் கொட்ட அன்போடு பேசுகிறார்.
இயற்கை மீதானதும் மனிதன் மீதானதுமான தன்னுடைய நிலைப்பாட்டினையும் இளைஞர் யுவதிகளின் பொறுப்பற்ற வாழ்க்கை கோலத்தினையும் அதனால் விளையும் சுய நல வாழ்க்கை முறையையும் பெரும் கோபத்துடன் பேசுகிறார்.
ஊழியோடு சில நாழி எனும் தலைப்பில்
“ஊழிக் காற்று வந்து
ஊர் பெயர்த்தது
நாழிகை ஒன்றிரண்டில்
நகரம் குலைந்தது
பின்னங் கால்கள் பிடரிதொட
முன்னம் ஓடிய கூட்டத்தை
மண்மேடு மூடிக் கொள்ள, ஊரே
சவக் காடாகி சாந்தமானது
அழுகுரல் ஆங்காங்கே
இடி மின்னல் போட்டியானது
நேற்று வரை சாதிக்கு
சண்டையிட்ட கூட்டம்
சடுதியில் எல்லாம் மறந்து
கிடைத்த கூரைக்குள் தஞ்சமானது “
உயரப் பறக்க சிறகு வேண்டுமா?! எனும் தலைப்பில்
“உயரப் பறக்கும்
பருந்தைப் பார்த்து
எட்டிப் பறக்கவே
சிறகை விரித்தேன்
இல்லா சிறகுகள்
எப்படி விரியும்
மனதில் குறைகள்
மண்டையில் குழப்பம்
சிறகை விரித்தே
வானில் பறக்க
எனக்கும் வசதியாய்
சிறகுகள் வேண்டும்
அறிவியல் வளர்ச்சியில்
வளைந்த பறவையாம்
விமானம் ஏறியே
பறந்திட எண்ணினால்
கூண்டுக் குருவியாய்ப்
பறப்பதில் என் மனம்
கடுகளவேனும் உடன்படவில்லை “
மழைப் பாட்டு எனும் தலைப்பில்
“உயிர்மரித்து ஆவியாகும் உயிர்கள்
மண்ணில் கோடி – நீர்
ஆவிகளை உயிராக்கும் உன்
பிறப்பு விந்தை போடி
மேகக் கூட்டம் மோதிடவே
நீயும் மெல்ல அழுவாய் – உன்
அழுகையாலே மண் சிரிக்கும்
அதனை நீயும் அறிவாய் “
மனிதர்கள் பின்னிப் பிணைந்து நல் உறவுகளுடன் வாழ வேண்டும் என்பதே அவரது கவிதைகளின் போக்காவதோடு இயற்கை நெறிமுறைகள் போன்றவற்றின் மீதும் அவர் காட்டும் அன்பே கவிஞர் வைரமுத்து அவர்களை இந் நூலுக்கு வாழ்த்துச் செய்தி எழுத செய்துள்ளது.
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –


