வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்குமாறு உயர் நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரியிருக்கின்றமையைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறிய விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் சட்ட ரீதியான ஆதாரங்கள், ஆவணங்களுடன் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430/25 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அரசு தீர்மானித்திருப்பதாக அரசு சார்பில் ஊடக அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது காணி அமைச்சர் லால்காந்தவினால் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில், அது குறித்த விசாரணைகள் முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430/25 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அது குறித்து அமைச்சரவையின் கருத்தைக் கேட்டறிந்து சொல்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை வரை சட்டமா அதிபர் தரப்பு கால அவகாசம் கோரியிருந்தது.
நேற்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைராஜா, சோபித ராஜகருண, சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது, கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குத் தவணைக்குப் பின்னர் அமைச்சரவை இன்னும் கூடவில்லை என்றும், ஆகையினால் வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையின் முடிவை அறிந்து தெரிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்குமாறும் சட்டமா அதிபர் தரப்பு கோரியது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேற்படி வர்த்தமானி அறிவித்தலின்படி காணி சுவீகரிப்புக்கான கால நிர்ணயம், அந்த வர்த்தமானி வெளியாகி சரியாக மூன்று மாதங்களில் – ஜூன் 29 ஆம் திகதி – சட்ட ரீதியாக அரசுக்கு வரவிருக்கின்றது. அதற்குச் சரியாக முதல் நாள் வரை அரசு இப்போது நீதிமன்றத்தில் கால அவகாசம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது பற்றி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கில் 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணயச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
அந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்துவது குறித்து நாம் வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் இருக்கையில், அதனை மீளப்பெறப் போவதாகக் கடந்த மாதம் 27 ஆம் திகதி அரசு அறிவித்தது. அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.
ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படாததன் காரணமாக, அது குறித்து கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தேன்.
கடந்த செவ்வாயன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்குச் சட்டமா அதிபர் இன்று வரை (நேற்று) கால அவகாசம் கோரியிருந்தார்.
அதனையடுத்து இன்று (நேற்று) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சட்டமா அதிபர் மீண்டும் கால அவகாசம் கோரியிருக்கின்றார். இது மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் அவகாசத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றது. அவ்வாறெனில், இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தயங்குவது ஏன்?” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.