இனங்களிடையே ஐக்கியத்தினையும், சமாதானத்தினையும் கட்டியெழுப்பும் வகையில் இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டமான கதிர்காம பாதயாத்திரை இன்று (20) மட்டக்களப்பில் ஆரம்பமானது.
“நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த கதிர்காம பாத யாத்திரை மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தப்பட்டுவருகின்றது.
இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பமான நிலையில் அது தொடர்பான நிகழ்வு கூழாவடி விக்னேஸ்வரர் திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்) மனுல சமன் பெரேரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் உப்புல், தேசிய மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் நா.குகேந்திரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களான மா.சசிகுமார், அ.தயாசீலன், திருமதி சதீஸ்வரி கிருபாகரன் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்து, பௌத்த, முஸ்லிம் மதத்தலைவர்களினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.
இந்த பாதயாத்திரையில் வடகிழக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் இருந்து 100 இற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


