மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் சந்தேக நபர்கள் 30 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
குறித்த வழக்கு மீதான விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இன்று (20) வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 2023 ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறைப் பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபகளுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை, முறைகேடாக ஆட்களை தடுத்துவைத்தமை, தேசிய வீதி சட்டத்தினை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.
குறித்த வழக்கு மீதான விசாரணையில் சாட்சியங்களிடம் வழக்கினை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான மேலதிக ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இலங்கை தண்டனை சட்டக்கோவை 186 இன் பிரகாரம் நீதவானுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கினை முடிவுறுத்தியதுடன் குற்றச்சாட்டப்பட்ட 30 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.