வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் பதில் அதிபராக கடமையாற்றி வந்த திருமதி மோகனதாஸ் ஞானமதி என்பவர், முன்னர் கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய திரு.சிவநாதன் அவர்கள் ஓய்வு பெற்ற (29.09.2023) தொடக்கம் இன்று வரை பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
அன்று தொடக்கம் இன்று வரை பாடசாலையில் எந்தவொரு விடயத்திலும் வீழ்ச்சி நிலை அவதானிக்கப்படவில்லை என்பதுடன், அவரது கடமைக் காலத்தில் பாடசாலையின் தினசரி செயற்பாடுகள் கட்டுக்கோப்புடன் நடைபெற்று வருவதனையும், பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதுடன் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகளிலும் கடந்த பல ஆண்டுகளை விட பல வெற்றிகள் பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த பதில் அதிபரையே நிரந்தர அதிபராக நியமிக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சுமார் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலைக்கான அதிபர் நியமனம் தொடர்பில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றிருந்தன. குறித்த நேர்முகத் தேர்வில் பதில் அதிபரும் கலந்து கொண்ட போதும் இதுவரை எவரும் நிரந்தர அதிபராக நியமிக்கப்படாமல் இருந்த நிலையிலேயே தற்போது நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுளளார்.
குறித்த கல்லூரியின் பதில் அதிபராக செயற்பட்ட திருமதி மோகனதாஸ் ஞானமதி என்பவரே நிரந்தர அதிபராக வடமாகாண கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ் நிரந்தர நியமனத்திற்காக உழைத்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வடக்கு ஆளுனர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பவற்றுக்கு பாடசாலை சமூகம் நன்றியையும் தெரிவித்துள்ளது.