வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், நிதிகளை உரிய காலத்தில் செலவு செய்ய வேண்டும் என்றும், கௌரவ ஜனாதிபதியும் அதை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் சுகாதார திணைக்களம், சுதேச மருத்துவ திணைக்களம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் ஆகிய ஒவ்வொரு திணைக்களங்களினதும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



