எழுநாவின் தயாரிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதையாக ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ ஆவணப்பட திரையிடலும், கருத்துப் பகிர்வும் இன்று (20) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கட்டோரின் உறவினர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் இந்த ஆணவப்படத்தின் தயாரிப்பாளர், ஊடகவியலாளர் அமரர் அ. சேகுவேரா (இசைப்பிரியன்) அவர்களது அவர்களுடைய திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்வில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கட்டோரின் உறவினர் சங்கத் தலைவர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கட்டோரின் உறவினர் சங்க பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கட்டோரின் உறவினர்கள், சமூக செயற்ப்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கிறது.
அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும், கண்ணீரும், கோபமும், ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகார சக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகிறது.
இந்த ஆணவப்படதின் தயாரிப்பாளர் அமரர் அ. சேகுவேரா (இசைப்பிரியன்) அவர்களது மறைவால் காலதாமதமாக வெளிவந்தாலும் அதன் கனதி மாறாமல் காலப் பொருத்தத்துடன் அமைகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.




