முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் நேற்று (19) குறித்த மீனவர் சென்ற மீன்பிடி படகை மீனவர்கள் கடலில் இருந்து கரைக்கு கொண்டு வந்திருக்கின்ற போதும் மீனவர் இதுவரை கரை சேரவில்லை.
குறித்த மீனவர் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைபாட்டின் அடிப்படையில் இன்றைய தினம்(20) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் குறித்த படகில் இருந்த இரத்தக்கறை மற்றும் காயங்கள் மீனவரின் உடை மற்றும் ஏனைய பொருட்கள் மீதான தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுனாமியில் தன்னுடைய ஐந்து பிள்ளைகளை பறிகொடுத்த நிலையில் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்துவரும் வின்சன்டிபோல் அன்ரனிகருணல் (அருமை) எனும் 62 வயதுடைய மீனவர் நேற்றுமுன்தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்றிருக்கின்றார்.
இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற ஏனையவர்கள் குறித்த மீனவர் சென்ற படகு தனியாக கடலில் மிதந்து வருவதை அவதானித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கடலில் இருந்து அவர் பயணித்த படகினை கரைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு கடலிலே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
சட்டவிரோத மீன்பிடியாளர்கள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், டயனமற் பாவித்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளை பாவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் சாதாரண மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற முல்லைத்தீவு மீனவர்களுடன் தொடர்ச்சியாக பல்வேறு முரண்பாடுகளுடன் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
அண்மையில் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஆறு படகுகள் முல்லைத்தீவு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனுடைய பின்னணியாக குறித்த மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது
இந்நிலையில் குறித்த மீனவரை தேடி நேற்று (19) காலை எட்டு படகுகளில் மீனவர்கள் கடலில் சென்று தேடியபோதும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினமும் குறித்த மீனவரை தேடி கடலில் சுமார் 25க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் சென்று தேடுதல் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







