முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, மூங்கிலாறு பிரதேசங்களில் கும்பல் ஒன்று தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இறச்சிக்காக களவாடி விற்பனை செய்து வந்துள்ளது.
இந்தக் கும்பல் நேற்று (19.06.2025) இரவு வாகனம் ஒன்றில் மாடுகளை திருடி ஏற்றியவேளை மக்கள் தகவல் அறிந்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸ் பரிசோதகர் வி.ரத்தினாயக்கா தலைமையிலான பொலிஸ் சாயன்ட் அ.அஜீத்(45555) பொலீஸ் கொஸ்தாபிள் வி.டிதுசன் (107058) சம்பிக்க(6787) திஸ்சநாயக்கா (83157) உள்ளிட்டவர்கள் தலைமையிலான குழுவினர்கள் விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வாகனம் ஒன்றில் இரண்டு மாடுகள் ஏற்றப்பட்ட நிலையில் நான்கு நபர்கள் மாடுகளை திருடியுள்ளார்கள். இருட்டுமடு கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களும், மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நால்வரும், வயிற்றில் கன்றுடன் காணப்படும் மாட்டுடன் இன்னும் ஒரு மாட்டினையும் இவ்வாறு இறைச்சிக்காக கடத்தியுள்ளார்கள்.
குறித்த வாகனம் ம் மற்றும் சான்றுப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களை 20.06.2025 இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு கிராமங்களில் நீண்டகாலமாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.