“ராஜபக்ஷக்கள் போல் நாம் ஆட்சியில் இருந்து ஒருபோதும் ஓடவும் மாட்டோம். போராட்டக்காரர்களுக்குப் பயந்து ஒளியவும் மாட்டோம். மக்கள் பக்கம் நின்று அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதே எமது அரசின் பிரதான திட்டம்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஈரான் – இஸ்ரேல் மோதல் பல நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இலங்கையில் எரிபொருள் உட்பட பல பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது என்றும் ஒரு தரப்பினர் சமூக ஊடகங்களில் விஷமத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கிடையிலான போரால் உருவாகப் போகும் பொருளாதார நெருக்கடியால் அநுர அரசும் ராஜபக்ஷ அரசு போல் மக்களைக் கைவிட்டுவிடும் என்றும், மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சமூக ஊடகங்களில் குறித்த தரப்பினர் மக்களைக் குழப்பும் வகையில் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
இந்த முட்டாள்களின் கருத்துக்களை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். நாம் எப்போதும் மக்கள் பக்கமே நிற்போம்.
கடந்த ஆட்சியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட உலக நாடுகளுக்கிடையிலான போர் காரணம் அல்ல. ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடிகளே அந்த நிலைமைக்குக் காரணம்.
அதேவேளை, தற்போது ஈரான் – இஸ்ரேல் மோதலால் எமது நாட்டுக்கு எந்த வழியிலும் பாதிப்பு ஏற்படாது. எனினும், அந்த நாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.” – என்றார்.