உள்ளூராட்சி சபைகளில் தலைமைப் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படும் கறுப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்,
“வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் பல சதிகளுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வெற்றி கிடைத்திருக்கின்றது. குறிப்பாக எங்கள் கட்சியினுடைய உறுப்பினர் ஒருவரே கட்சியினுடைய தீர்மானத்துக்கு மாறாகக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தமை ஏமாற்றத்துக்குரியது.
அவரை உடனடியாகக் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கான பணிப்புரையைக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனுக்கு விடுத்திருந்தேன். அதற்கமைய அந்த உறுப்பினர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வேறு சபைகளிலும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் எங்களைத் தோற்கடித்தவர்கள் யார் என எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், பகிரங்க வாக்கெடுப்பில் கட்சியின் தீர்மானத்தை மீறி இருக்கின்றமை தவறான விடயமாகும்.
மேலும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் சதி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் நடுநிலைமை வகித்த உறுப்பினருக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதோ அதேபோல் இரகசிய வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படும் கறுப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.