கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறிப்பாக தரம் குறைந்த மருந்து இறக்குமதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மாளிகாந்த நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து வகையில் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய பக்டீறியா வகை காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மருந்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற ஜேர்மனிய ஆய்வு கூடமொன்றில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் புற்று நோய்க்காக பயன்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் எவ்வித புற்று நோய் எதிர்ப்பு மருந்தும் இருக்கவில்லை எனவும் வெறும் உப்பு மட்டுமே காணப்பட்டது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பரிசோதனை அறிக்கையை இன்று நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
இந்தப் போலி மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் பல லட்சம் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.