அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உட்பட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், கடற்படைத் தளபதிகள் உட்பட மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பர்ஹான் முகம்மட் மற்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதலானோர் கலந்து கொண்டனர்
இதன் போது, முக்கியமாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களினால் பிடிக்கப்படும் மீன்களை கடற்கொள்ளையர்கள் திருடுவதை தடுத்து நிறுத்துவது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்தக் கடற்கொள்ளையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ ஆதம்பாவா தெரிவித்தார்.


