உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னரான பாரிய தேவைப்பாடு ஏற்பட்டது எனவும், அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பு காத்திரமானது எனவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது உள ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடுகள் அதிகம் உணரப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கூட்டுப் பொறுப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இக் கலந்துரையாடலில் நோக்கமானது உளவளத்துணை மற்றும் உளசமூகப் பணிகளை இணைந்த வகையில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதுடன், இவ் வேலைகளில் காணப்படும் இடைவெளிகளை இனங்கண்டு உளநலத் தேவைகளை நிவர்த்தி செய்யவதற்கான கலந்துரையாடலாக அமைவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க.கஜவிந்தன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு. பரா.நந்தகுமார், உள மருத்தவ வைத்திய அதிகாரி திருமதி அ. வினோதா, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு ந.உதயகுமார், அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

