“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும், யுத்த குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்பு கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களை போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ் உயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்பட வேண்டுமெனவும், இந்த விடயத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும் போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது.
மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேக நபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் 600 பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன.
அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணிப் பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர்என இவ்வாறு பல பேரிழப்புகளை தமிழ் மக்கள் சந்தித்திருந்தனர்.
யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன.
மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் 201 3ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டு வரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன.
இங்கு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018 ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்த விவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்ற போது 2023 ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையான விடயமாக மாறிவிட்டது.
யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்தப் புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டு வருகின்றன.
செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அகழ்வுப் பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக் காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்பட வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது.
இவ்வாறு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதேபோன்றே இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்தப் புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை.
அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தியிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது.
இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, இந்தப் புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச் செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக் கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றார்.