“உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை வழங்கும் வழிகாட்டல்களை மீறமாட்டோம்” என அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தீவுப் பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உறுப்பினர்கள் இன்று காலை கட்சியின் தலைமையை நேரில் சந்தித்து உறுதி தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் மற்றும் நிர்வாகப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எஸ்.சுகிர்தன் ஆகியோரை தீவுப் பகுதியில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களின் 13 உறுப்பினர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
நெடுந்தீவுக்கான படகு சேவை தாமதம் காரணமாக மூன்று உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் பங்குபற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
”தீவுப் பகுதியில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்குத் தேநீர் விருந்து ஒன்று தீவுப் பகுதியில் அண்மையில் நடைபெற்றதே தவிர, தீவுப் பகுதி தமிழரசுக் கட்சிக் கிளைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என இந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
“சபைகளை அமைப்பது தொடர்பாக கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவு குறித்து அந்தக் கூட்டத்தில் சாதக, பாதகமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஆனால், தீர்மானம் என்று எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. அத்தகைய முடிவு எடுக்கப்படக்கூடிய கூட்டமும் அதுவல்ல. அது வெறும் தேநீர் விருந்துபசாரம் மட்டுமே. ஆகவே, கட்சித் தலைமை எடுக்கும் முடிவை மீறாமல் அதையே பின்பற்றுவோம். அது பற்றி எந்த சந்தேகமும் தேவையில்லை” என தீவக உள்ளூராட்சி உறுப்பினர்கள் அங்கு கருத்து தெரிவித்தனர் என அறியவந்தது.
அவர்களின் விளக்கம் கட்சியின் தலைமைக்குத் திருப்தி தந்ததாகவும் தெரியவந்தது.