இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள் என வடக்கு மாகாண மீனவர்கள் எழுத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர் கொழும்புக்குச் சென்று கடற்தொழில் அமைச்சர், பிரதி அமைச்சர், கடற்தொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே மேற்படி கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்திய மீனவர்களின் தடைக்காலம் நிறைவுற்று மீன்பிடிக்கக் கடலுக்கு வருவதனால் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை மனிதாபிமானத்துடன் குறைந்தது தினமும் மூன்று படகுகளைப் பிடிக்க வேண்டும்.
கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் அரசுடமையாக்கப்பட்ட படகுகளைத் துறைமுகப் பகுதிகளில் இருந்து 3 மாத காலப் பகுதிக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.
பாரம்பரிய சிறிய படகு மீனவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வடக்கு மாகாண மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.