மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் யாப்பு விதி, ஆலயத்தின் பொது சபை, நிர்வாக சபை போன்ற விதி முறைகளுக்கு முரணாக ஆலய செயலாளர் செயற்பட்டு, சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டி, ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர்வரும் 22 ம் திகதி திருவிழா சம்மந்தமாக விசேட தேச மகாசபை கூட்டம் இடம்பெறும் என ஆலய பரிபாலனசபை தலைவர் முருகேசு ரமணன் தெரிவித்தார்.
தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் பரிபாலன சபையினரின் ஊடக மாநாடு வவுணதீவு பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஆலய பரிபாலனசபை கடந்த நிர்வாக சபை கூட்டங்களிலே எதிர்வரும் 22 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா சம்மந்தமாக விசேட தேச மகா சபையை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய அழைப்பிதழ்கள் எல்லாம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையிலே தலைவர் என்ற வகையில் எனக்கும், ஆலய பரிபாலன சபைக்கும் தெரியாத வகையில்தான் ஆலய பரிபாலனசபை செயலாளர் என்ற பதவியை வைத்து நிர்வாகத்துக்கு தெரியாமல் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு நேற்று (15) ஒரு சில திருவிழா கிராமங்களை சேர்த்து ஆலய அமைப்பு உப விதிமுறைக்கு எதிராக கூட்டத்தை ஏற்பாடு செய்து ஒரு நிர்வாக சபையை தெரிவு செய்துள்ளார்.
எனவே ஆலயத்தின் பொதுசபைக்கும், நிர்வாக சபைக்கும் மற்றும் உப விதிக்கும் முரணாக செயற்பட்டுள்ளார். இது சட்ட ரீதியாக பிழை. அரசாங்க அதிபர் ஊடாக அனுமதியை பெறாது தனிப்பட்ட ரீதியில் அரசாங்க அதிபர், இந்து காலச்சார உத்தியோகத்தர், பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கு ஒரு கடிதத்தை வழங்கியுள்ளார். இருந்த போதும் 48 நிர்வாக சபை உறுப்பினர்கள் இருந்தும் எவரிடமும் கேட்காமால் கடிதம் அனுப்பப்பட்டு, கூட்டம் நாடாத்தி ஒரு குழப்பகரமான நிலையை ஏற்படுத்தி ஒரு நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளார். இது ஒரு சட்டரீதியானது அல்ல. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேவேளை விசேட அனுமதி பெற்று பொதுக் கூட்டம் நடந்ததாக வரலாறு இல்லை என்பதுடன் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் தான் கூடுதலான பொறுப்பு வாய்ந்த நிர்வாகிகளை தெரிவு செய்ய வேண்டும் என ஆலய யாப்பு உப விதியில் உள்ளது. ஆனால் உப விதிக்கு மாறாக செயலாளர் ஒரு சிலருடைய நன்மை கருதி மட்டக்களப்பு வடக்கு நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை தலைவராக தெரிவு செய்துள்ளனர்.
எனவே செயலாளர், எனக்கு தெரியாது எனது பெயரை பயன்படுத்தி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, எனக்கு களங்கம் விளைவித்துள்ளர். ஆகவே சட்டவிரோத செயற்பாடு மற்றும் எனது பெயருக்கு களங்கம் விழைவித்த அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பக்கதர்கள் குழப்பமடைய தேவையில்லை எதிர்வரும் 22ம் திகதி ஏற்கனவே தீர்மானித்தபடி திருவிழா விசேட மகா பொதுச்சபை கூட்டம் இடம்பெறும். அதில் அனைவரும் சமூகம் தந்து உங்கள் கருத்துக்களை வழங்கி எல்லைப் பகுதியில் உள்ள இந்த ஆலயம் எதுவிதமான பிரச்சினையும் இன்றி அபிவிருத்தியை செய்ய பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.