ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனினும், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் உள்வாங்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அதன் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் ‘உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம்’ தொடர்பான அறிக்கையுடன் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது.
இன்று ஆரம்பமாகும் இந்தக் கூட்டத் தொடரின் கால அட்டவணையில் இலங்கை விவகாரம் உள்வாங்கப்படவில்லை. இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவார் என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை வெளியிடப்படும். இதன்போது, இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து ஆராயப்படும் என்றும் தெரியவருகின்றது.