வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை மஹர பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
30 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர்களிடம் 23 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போலியான தற்காலிக ஓட்டுநர் உரிமம், ஒரு தேசிய அடையாள அட்டை, வருமான வரி உரிமம், சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாகன எண் தகடுகள் மற்றும் 05 கைத்தொலைபேசிகள் இருந்தன.
வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதாக விளம்பரங்கள் ஒட்டப்பட்ட இடங்களுக்கு சந்தேக நபர்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், ஒரு மாதம் அல்லது பல வாரங்களுக்கு முன்பணம் செலுத்தி வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுள்ளதாகவும், போலியான பதிவு புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்களைத் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.