எழுத்தாளர் :- உதயமூர்த்தி
நூல் :- உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்
விலை :- 100 ரூபாய்
மனித மனங்களை கூர்மைப்படுத்த கூடிய சிந்தனைகளை எழுத்துக்களாக தருவதில் ஐயா உதயமூர்த்திக்கு பெரும் பங்கு உண்டு. இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவருடைய போக்கும் வாழ்க்கை முறையும் வாழும் நெறிமுறைகளும் ஏதோ வாழ்ந்து இறந்தால் போதும் என்ற மனநிலையில் தான் நகர்கிறது.
பிறந்து வளர்கின்ற காலத்தில் கல்வி. பின்பு அந்த கல்விக்கேற்ற வேலை. பின்பு அந்த வேலையைக் கொண்டு திருமணம், அதன் மூலம் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து எப்படியாவது அவர்களுக்கும் திருமண பந்தத்தை செய்து கொடுத்து விட்டு நிம்மதியாக நமது கடைசி காலத்தை கழித்து இறந்தால் போதும் என்ற குறுகிய மனநிலைகள் பரவலாக எல்லோரிடமும் வளர்ந்து குடிகொண்டு விட்டது.
வாழும் காலத்தில் எவ்வாறு வாழ வேண்டும், யாருக்காக வாழ வேண்டும், வாழ்வை எவ்வாறு பயனுள்ளதாய் மாற்ற வேண்டும் என்ற பல நியாயமான தேவைகளை மனிதர்கள் உணர்வதும் இல்லை. படித்து அறிவதுமில்லை. நாம் வாழ்கின்ற காலத்தில் எவ்வாறு நற்குணங்கள், போற்றும் பழக்கங்களை வளர்க்க வேண்டும் என்று தெளிவாக விளக்குகிறார் ஐயா உதயமூர்த்தி.
அஞ்சாமை என்பதை மனதுள் ஏற்ற வேண்டும். எதனை எந்த இடத்திலும் செய்வதற்கான துணிவு நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதிலும் சரியானதை செய்வதற்கான துணிச்சலை நாம் வளர்க்க வேண்டும்.
எது ஒன்றையும் சுய முடிவாக எடுக்கப் பழக வேண்டும். எந்த இடத்திலும் பின்நோக்கி காலினை வைக்க கூடாது. முன்னோக்கியே வைக்க வேண்டும். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு எமது பயணம் தொடரப்பட வேண்டும். நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும். நம்மை முதலில் மாற்றுகிற போதே நமது சமூகத்தினையும் மாற்ற நாம் தகுதி உடையவர்களாவோம்.
சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். நம்மை கட்டுபடுத்தும் அதாவது நமது மனதினை கட்டுபடுத்தி நமது எண்ணப்படி இருக்க, இயங்கச் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் சுதந்திரமாக சிந்திக்கவும் செயலாற்றவும் தகுதி படைத்தவர்களாகுவோம்.
நம்முள் இருக்கும் திறமையினை தேக்கி கொண்டு வளர்க்க வேண்டும். திறமையினை வளர்த்து கொண்டு காலை முன்னோக்கி வைக்க வேண்டும். இலக்கினை துல்லியமாக குறி வைத்துக் கொண்டு சிறுத்தையினை விட வேகமாக இலக்கெனும் கனவினை நோக்கி ஓட வேண்டும். இவ்வாறான நல்ல நூல்களை தேடி தேடி வாசிப்பது நல்லறிவைத் தரும்.
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

