சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும் தொடர்ச்சியாக பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில் காணப்படுவதாகவும் இது தொடர்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கடற்தொழில் அமைச்சரும், கிளிநொச்சி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கண்டாவாளை பிரதேச செயலாளர் பிருந்தகன் மற்றும் நீர்ப்பாசன தினைக்களத்தின் குழுவினர்கள் சென்றிருந்தனர்.
கல்லாறு பகுதியில் காணப்பட்ட பறவைகள் சரணாலயம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளதுடன் கடல்நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உள்வரும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முற்றுமுழுதாக அழிவடைந்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவக் காவலரண் அமைத்து இங்கு இடம் பெறுகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.
