இன்று காலை ஈரானின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் இரகசியமாக அணு குண்டு தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. இராணுவ தளங்களும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், நாடு முழுவதும் “சிறப்பு அவசரநிலை” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஈரானிடம் இருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அரசு ஊடகங்கள், தெஹ்ரான் இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளன.
அமெரிக்கா இந்த தாக்குதலில் தங்கள் படைகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தற்காப்புக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் சமீபத்தில் ஈரானை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

