சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கையில் இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக் கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த இரு மனுக்களும் இன்று மன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
வழக்குத் தொடுநர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விவரத்தை எடுத்துரைப்பார்.
சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.