ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவ்வழக்குடன் தொடர்புபட்டதாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளடங்கலாக 10 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்ற ட்ரயல் அட்பாரில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பலர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப்பிரிவில் பணியாற்றியவர்களாவர். இந்நிலையில் இவ்வழக்கில் பிரதான சாட்சியாளரான சுரேஷ்குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன அச்சுறுத்தியதாக சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணைப்பிரிவின் தலைவர் நேற்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
ஷம்மி குமாரரத்னவின் தனிப்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பலமுறை சுரேஷ்குமார் அச்சுறுத்தப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
விடயங்களைப் பரிசீலித்த திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.