இந்த மாத தொடக்கத்தில் ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ரஷிய படைத்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா நகரக்களை குறிவைத்து ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை குறிவைத்து ரஷிய படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். சுமார் 9 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 54 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 17 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கார்கிவ் நகர மேயர் இகோர் தெரகோவ் தெரிவித்துள்ளார். மேலும் இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருப்பதாகவும், அவரக்ளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.