பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப் படு கொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். அதுவும் அரசியலே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் தோன்றுகின்றன. இதற்கான நீதி விசாரணை நடத்தப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டாலும் அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அத்துறையில் சர்வதேச நிபுணத்துவம் கொண்டவர்களால் நடத்தப்பட்டால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள இனப் படு கொலைளுக்கு முகம் கொடுத்து வலிகளை சுமந்து அரசியல் நீதிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதி கிட்டும். தேசிய மக்கள் சக்தி இதற்கான கதவுகளை திறக்குமா? அல்லது நாட்டின் இறைமை எனக் கூறி நீதிக்கான தடைகளை விதிக்குமா? என்பதே எமது கேள்வி.
தற்போது அகழப்படும் செம்மணி சமூக புதைக்குழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்துக்குரியது. இப் புதைகுழியை மூடி மறைக்கவும் கொலையாளிகளை பாதுகாக்கவும் அக்காலத்தில் சமாதான தேவதையாக காட்சியளித்த சந்திரிக்கா மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியாக தற்போது அனுர குமார தலைமையில் பதவியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்களே.
தற்போது அகழப்படும் சமூக புதைகுழியை விட மேலும் பல சமூக புதைகுழிகள் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு எல்லாம் விசாரணையை நடத்த எந்த ஒரு ஆட்சியாளர்களும் துணியவில்லை. அகழ்வு மற்றும் ஆராய்வு அறிக்கைகளை எல்லாம் பாதாள கிடங்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப் படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். அதுவும் அரசியலே.
தமிழர் தாயகப் பூமியில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படை முகாம்கள் அதன் சூழவுள்ள வளவுகள் மற்றும் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளிலும் சமூக புதை குழிகள் இருக்கலாம். அவ் அந்நில பிரதேசங்களும் ஆய்வுக்குட்படுத்தப்படல் வேண்டும்.
வன்புணர்வின் பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருஷாந்தி தொடர்பில் மரண தண்டனை கைதியான கோப்ரல் சோமரத்னா என்பவரால் 600 மேற்பட்டோர் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டனர் எனக் கூறியதன் பின்னர் அதனோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டோர் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல பதவி உயர்வுகளும் அரச சலுகைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக புதைகுழியை ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டு அக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாய் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுகளையும் அரச சலுகைகளையும் அரசு மீளப்பெறல் வேண்டும்.
இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை. மனிதாபிமான வகையில் மீட்பு யத்தமே நடந்தது எனக் கூறும் முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா போன்றவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகரா போன்றவர்கள் மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் விஜிதஹேரத் செம்மணி சமூக புதைகுழி காட்சிகளை கண்ட பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரம் நாற்காலிகளில் அமர்ந்த பின்னர் அரச சுகங்களுக்காக இனப் படுகொலை ஆட்சியாளர்களை பாதுகாத்து அரசியல் போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்தவர்களும் தம் மனசாட்சிகளை தொட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மனித குலத்துக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை 2009 இறுதி யுத்தத்திற்கு முன்னரும் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தியமைக்கு மிக ஆணித்தரமான சாட்சியாகவே செம்மணி சமூக புதைகுழி காட்சி தருகின்றது. இது மனித நேயம் கொண்ட மனசாட்சி உள்ளோரை நிச்சயமாக தட்டி எழுப்பும்.
இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் தமிழர்களை கொன்று குவித்ததும், காணாமலாக்கப்பட்டு சமூக புதைகளுக்குள் தள்ளியதும், ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து சிறைகளில் அடைத்ததும் இலட்சக்கணக்கானோரை புலம்பெயர வைத்ததும் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல தமிழரின் தாயகத்தையும் தேசியத்தையும் அதன் அரசியல் வழிதடத்தையும் அழிப்பதற்காகவே.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பேரினவாத சக்திகள் அரசியல் முள்ளிவாய்க்காலில் எம்மை மூழ்கடிக்கவே திட்டங்கள் தீட்டத்தொடங்கியுள்ளதோடு அவர்களின் அரசியல் முட்கம்பி வேலிக்குள் நிரந்தரமாக அடைத்து வைக்கவும் துடிக்கின்றனர்.
போராளிகள் விதையான மண்ணில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நிலத்திலிருந்தும் எழுகின்ற குரலை தமிழர் தேச அரசியலுக்கான குரலாக ஏற்று கொள்கை அடிப்படையில் அரசியலை முன்னோக்கி நகர்த்த ஒன்றுபடுமாறு தமிழ் தேச அரசியல் தலைமைகளை கேட்கின்றோம்.