“சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் – மிஹிந்தலை விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றனர். இதுவே உண்மை.
சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால், அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக் குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும்.
ஆனால், அந்தத் திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மக்களுக்குச் சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனக் கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூகக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூகக் கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூகக் கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒரு விடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே, சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும்.” – என்றார்.