மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
அத்துடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.பி பண்டாரவின் ஆலோசனையில் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு குழுவினர் சம்பவ தினமான இன்று கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையமான வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட 44 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 100 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக பொசன் பூரண தினத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி ஆகிய குற்றங்களுக்கு கீழ் வழக்கு தாக்கல் செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்iகை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரியந்த பண்டார பணிபுரையின் கீழ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.