மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் கோராவெளி கிராமத்தில் மருதம், முல்லை என அமையப்பெற்ற நிலத்தில் மாதுருஒயா நதியில் பாய்ந்தோடும் நீர் அலையின் அருகே அமையப் பெற்ற இடத்தில் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
“சோழநாட்டு கண்ணகி பாண்டிய நாட்டில் மதுரையை ஏரியூட்டிய வீரபத்தினியாகி சேர நாட்டிலே தெய்வ வடிவமாகி “
திராவிட பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் கண்ணகியம்மனாக வழிபடுகின்றனர்.
கண்ணகிக்கு பல இடங்களிலும் ஆலயம் இருக்கின்ற போதிலும் கோராவெளி எனும் இடத்தில் அமையப்பெற்ற கண்ணகிக்கு
கிரான், சந்திவெளி, கோரகல்லிமடு, முறக் கொட்டாஞ்சேனை, கிண்ணையடி, மிறாவோடை, சித்தாண்டி என ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் தனித்தனியாக பந்தல்கள் அமைத்து அதனுடன் சேர்த்து பிரதேச செயலாளர் தலைமையில் சில கிராமத்து மக்கள் சேர்ந்து எட்டு பந்தல்களாக கண்ணகி அம்மனை இங்கு வழிபடுகின்றமை குறிப்பிடதக்கது.
ஆண்டுக்கு ஒருமுறை இரு நாட்கள் மட்டும் இடம் பெறும் சடங்கில் முதல்நாள் மாலை நேர்ப்ப பூசையுடன் ஆரம்பமாகி அடுத்தநாள் நெல்குத்துதல் மற்றும் விநாயகர் பானை எடுக்கப்பட்டு எழு கிராமங்களை சேர்ந்த மக்களினால் பொங்கல் பொங்கி தங்கள் நேர்த்தி கடன்களை தீர்த்து வைப்பார்கள். அம்மன் கடைசி விழாவாகிய குளிர்த்தி பாடல்கள் பாடப்பட்டு பக்த அடியார்களுக்கு அம்மனின் தீர்த்தமும் வழங்கப்படும்.
கண்ணகி அம்மனின் நிகழ்வில் பல்லாயிரம் பொதுமக்கள் கலந்து கொள்வதுடன் குறித்த ஆலயத்தின் வழிபாடானது கிராமிய வழிபாட்டு முறையான ‘தெய்வமாடுதல், கட்டுகேட்டல் முறையே நூற்றாண்டு தொட்டு பிரமித்து நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
