இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார். 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற வைத்தார். தற்போது பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கேப்டன்சி குறித்து Cricbuzz-யிடம் பேட்டியளித்த ஸ்ரேயாஸ், “கேப்டன்சி நிறைய முதிர்ச்சியையும் பொறுப்பையும் கொண்டு வருகிறது. அணிக்கு சிறந்த முறையில் பங்களிக்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் ஒரு அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் கேப்டனை நோக்கி தான் வருவார்கள். நான் 22 வயதிலிருந்தே கேப்டனாக இருந்து வருவதால்,எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். நான் அப்படியான தருணங்களை ரசித்திருக்கிறேன்.
கேப்டனாக வழிநடத்துவதை விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.