“ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த பொலிஸ் அதிகாரிகளையும் மக்கள் வேறுவிதமாக நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாக” மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளர் இ. பிரேம்நாத் தெரிவித்தார்.
எந்தவித பிடியாணையும் இல்லாமல் மட்டக்களப்பு பொலிஸார் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குள் வந்து தன்னை வலுக்கட்;டாயமாக கையில் விலங்கிட்டு கைது செய்து சென்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதுடன் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இவ் ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “கடந்த நான்காம் திகதி என்னுடைய தொழில் நிலையத்திற்கு இரண்டு பொலிஸார்வருகை தந்தனர். ஒருவர் சீருடையிலும், மற்றைய ஒருவர் சிவில் உடையிலும் வந்தார்கள். வந்து என்னுடன் பேசிக் கொண்டு இருந்தபோது எனது கையை பிடித்தார்கள். பிடித்து விட்டு எனக்கு பிடியாணை இருப்பதாக உம்மை கைது செய்கின்றோம் என்றனர். அதே நேரத்தில் எனது கைக்கு விலங்கை பூட்டினர்.
எனக்கான பிடியாணையினை காட்டும்படி கூறினேன். அவர்கள் அதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை காட்டவும் இல்லை. என்னை கைது செய்து ஒரு மணி நேரம் வீதியில் வைத்திருந்து விட்டு ஏறாவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மறுநாள் காலையில் அங்கிருந்து மட்டக்களப்பு நீதிமன்றுக்கு என்னை அழைத்து வந்தனர்.
முன் பிணையில் வெளியில் வரும்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர் உள்ளே வாருங்கள். உங்களை விசாரிக்க வேண்டும் உங்களுக்கு வேறு ஏதும் வழக்குகள் இருக்கின்றதா என்று கூறி என்னை அழைத்தனர். நீதிபதி என்னை செல்வதற்கு அனுமதி வழங்கி உள்ளார் என்று கூறி நான் வெளியே வந்தேன். மீண்டும் வந்து எனது வயித்தை கிள்ளி என்னை கொண்டு சென்று நீதிமன்றில் காணப்படும் கூண்டுக்குள் கொண்டு என்னை அடைக்க செல்லும்போது எனது பின் மண்டை பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் என்னை தாக்கினார்.
உண்மையில் அது ஒரு மன வேதனையான விடயம் நீதிமன்றத்திற்குள் வைத்து என்னை தாக்குகின்றார். அனைவரும் பார்க்கின்றார்கள் என்றால் இந்த சிறைச்சாலைக்குள் எத்தனை இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிந்திக்க தோன்றுகிறது. கைதிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது.
நான் நாளை அந்த சிறைச்சாலைக்குள் சென்றால் என்னைக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. ஆகவே இதனை நான் மனித உரிமை ஆணைக்குழு, போலீஸ் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் அனைத்து இடத்திற்கும் எனக்கான நியாயத்தை நீதியை கேட்டு எழுத்து மூலம் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளேன்.
இதே நேரத்தில் மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகத்தை நாடி வந்திருக்கின்றேன். இந்த ஊடகத்தின் உதவியோடு என்னுடைய உண்மையான பிரச்சினை தெளிவாக முழு உலகத்திற்கும் அறியப்பட வேண்டும். உண்மையாகவே எங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் மறைமுகமாக காணப்படுகிறது. எதற்கு என்று தெரியாது நான் நினைக்கின்ற சமூகத் சேவைக்காகவா, இங்கு நடைபெறுகின்ற காணி அபகரிப்புகளை அடையாளம் காட்டுவதாலோ அல்லது அதிகாரிகள் மட்டங்களில் இடம்பெறுகின்ற ஊழல்களை சுட்டிக் காட்டுவதாலோ என்று தெரியாது. இதுதான் விடயம் வேறு ஒன்றும் இல்லை.
எனக்கான பாதுகாப்பு இந்த நாட்டில் வழங்கப்பட வேண்டும். நான் குற்றம் செய்தால் நீங்கள் என்னை தண்டிக்கலாம். குற்றத்திற்குரிய ஆதாரங்கள் இருந்தால் சரி இல்லாமல் என்னைப் போன்ற உண்மையான சமூக செயற்பாட்டாளர்கள் அனேகமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு பாதிக்கப்படக்கூடாது சட்டம் என்கின்ற ஒரு கருத்தை வைத்துக்கொண்டு அப்பாவிகளும் பாதிக்கப்படுகின்றார்கள். பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.
எனக்கு கிடைக்கப்பெறுகின்ற நீதியோடு இதே போன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் எவருக்கும் இடம்பெறக்கூடாது என்பதையும் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
