யாழ் நகர மத்திய பகுதியில் அதாவது அரச பேருந்து தரிப்பிடத்தின் முன் பகுதியில் தொற்று நோய்கள் மற்றும் நுளம்பினால் பரவும் நோய்கள் அதிகளவு பரவும் அபாயத்தில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இப் பகுதியில் வடிகால் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதால் குறித்த பகுதியில் சுமார் 20 m வடிகால் அமைப்பு திறந்த நிலையில் காணப்படுவதோடு இப் பகுதியில் வீதியானது மூடப்பட்டே காணப்படுகின்றது. இப் பகுதி போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு குறித்த பகுதியில் திறந்த நிலையில் காணப்படும் வடிகால் அமைப்பில் அதிகளவு நீர் தேங்கி நிற்பதை காணக்கூடியவாறு உள்ளது.
மற்றும் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மிருக எச்சங்கள் மற்றும் பல கழிவு பொருட்கள் காணப்படுவதோடு குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் இவ் வடிகால் அமைப்பில் அதிகளவான ஈக்கள் மற்றும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளது.
பிரதானமாக குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலே பழக்கடை வியாபார நிலையங்கள் அதிகளவு காணப்படுவதால் அவ் வியாபார நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் பெருகும் ஈக்கள் அண்மித்த பகுதியில் இருக்கும் பழக்கடை மற்றும் திறந்த உணவகங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் என்பவற்றில் நிற்பதால் பாரியளவு நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் இதற்கான மாற்று நடவடிக்கைகளை மாநகர சபை உடனடியாக செய்ய வேண்டும் என இப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கேட்டு நிற்கின்றனர்.



