வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் விசேட திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) விமர்சையாக இடம்பெற்றது.
உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள், தீபாராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து உள் வீதி உலா வந்து தொடர்ந்து மூர்த்திகள் தேரில் எழுந்தருளி மக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வீதி உலா வந்தது.
அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பச்சை சார்த்தப்பட்டு ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
கடந்த மாதம் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் தேர்த் திருவிழா மிக விமர்சையாக ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இவ் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இன்றையதினம் தீர்த்த திருவிழா உற்சவமும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.










