மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே இந்த மேலான அவையில் மாண்புமிகு அமரர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்களைப் பற்றிய இரங்கல் உரையினை ஆற்ற விழைகின்றேன்.
மாண்புமிகு மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் 1942 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இருபத்து ஏழாம் நாள் சோமசுந்தரம், தையல்நாயகி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆறு உடன்பிறப்புகள் உள்ளனர். இவரது இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவரது சொந்த ஊர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவிட்டபுரம் என்பதனால் ஊரின் பெயருடன் இணைத்து மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டார்.
இவர் தனது தொடக்க கல்வியை தெல்லிப்பளை வீமன்காமம் மகா வித்தியாலும், இடைநிலைக் கல்வியை காங்கேசன்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றார்.
1980 ஆம் ஆண்டு மாசி மாதம் 06 ஆம் நாள் சதாசிவம் செல்வமணி இணையரது மகளான பவானி என்பவரைத் திருமணம் செய்தார். சேனாதிராசா – பவானி இணையருக்கு கலையமுதன், ஆரா அமுதன், தாரகா என மூன்று மக்கள் உள்ளனர்.
இளம் அரசியல் கிளர்ச்சியாளர்கள் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக மலர்ந்த நிகழ்வுகளால் வரலாறு நிறைந்துள்ளது. இளம் வயதில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளையோர் பிற்காலத்தில் அரசியலில் தூண்களாக மிளிர்ந்தனர். இனப் பிரிவின் இருபுறமும் இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் இலங்கையிலும் உள்ளன. மாவை சேனாதிராஜாவின் பெயரையும் அந்த எடுத்துக்காட்டுகளின் பட்டியலில் சேர்க்கலாம்.
இலங்கைத் தமிழர் உரிமை மீட்பு தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961 ஆம் ஆண்டில் மேற்கொண்ட அறவழிப் போராட்டத்தை அடக்க அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு இராணுவத்தை அனுப்பி அதனைக் கடுமையாக ஒடுக்கியது. அப்பொழுது சேனாதிராஜா நடேஸ்வரா கல்லூரியில் மாணவராக இருந்தார். சேனாதிராஜாவும் அவரோடு ஒத்த மாணவர்களும் பள்ளியை தவிர்த்து பல்வேறு அறவழிப் போராட்டங்களில் பங்குகொண்டு தன்னார்வ உதவிகளைச் செய்தனர்.
அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் மாண்புமிகு சேனாதிராஜா அவர்கள் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த பட்டறிவுகள் அனைத்தும் மாவை அவர்களின் அரசியல் நுழைவுக்கு வழி சமைத்தன. இவர் முதலில் காங்கேசன்துறை தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் இணைச் செயலாளர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
1970 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டதுடன் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
அந்தக் கால கட்டத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்ட 42 இளைஞர் தலைவர்களுள் சேனாதிராஜா முதன்மையானவராக விளங்கினார் .
அரசியல் கைதிகளாக பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நமசிவாயம் ஆனந்த விநாயகம் (வண்ணை ஆனந்தன்), காத்தமுத்து சிவநாதன் (காசி ஆனந்தன்), மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும் அக்காலத்தில் அரசியல் உணர்வுள்ள தமிழ் இளையோரின் கதாநாயகர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
மாவை சேனாதிராஜா தனது வாழ்க்கையில் பல்வேறு ஈழத் தமிழர் உரிமை மீட்பு செயற்பாடுகளில் பங்கு கொண்டமைக்காக ஏழு முறை கைது செய்யப்பட்டு ஏறத்தாழ பதினோராண்டுகளை எட்டு வெவ்வேறு சிறைகளில் ஓர் அரசியல் கைதியாக கழித்துள்ளார்.
1989 ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மறைவு காரணமாக 1989 ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
1989 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையும் அதன் பின்னர் மீண்டும் 1999 ஆம் ஆண்டில் நீலன் திருச்செல்வம் அவர்களின் மறைவுக்கு பின்னர் 1999 ஆண்டு தொடக்கம் 2000 ஆண்டு வரையும் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.
2000 ஆம் ஆண்டில் மீண்டும் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு 2020 வரையும் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியதோடு ஐந்து ஆண்டுகள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மொத்தம் 25 ஆண்டுகள் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆவார் .
2010 இல் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டு 2014 வரை அப்பதவியை வகித்தார். .
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாவை சேனாதிராசா 2024 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் அக்கட்சியின் தலைவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதிராசா அவர்களை நிறுத்த பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் விரும்பினர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து போட்டியில் இருந்து விலகி முன்னாள் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாய்ப்பினை வழங்கி பெருந்தன்மையுடன் செயற்பட்ட தலைவராக மாவை சேனாதிராஜா அவர்கள் விளங்கினார்.
நான், அமரர் மாவை சேனாதிராஜா அவர்களோடு 1974 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஐம்பது ஆண்டுகள் பழகியிருக்கின்றேன். அவர் பழகுவதற்கு இனிமையானவர். அனைவரோடும் பணிவுடன் பழகும் பண்பாளர். யார் உற்றார்? யார் அயலவர்? யார் நண்பர்? யார் பகைவர்? என்று பாராது அனைவரோடும் அன்போடு பழகும் அருங் குணத்தவர். அவரது அரசியல் எதிரிகளும் மதிக்கும் மனிதருள் மாணிக்கமாக மாவை சேனாதிராசா அவர்கள் விளங்கினார்.
இலங்கைத் தமிழர் இனச் சிக்கலைத் தீர்ப்பதற்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடுபட்ட மாவை சேனாதிராஜா அவர்கள் பெரும்பான்மை மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பின் அடையாளமாக விளங்கினார் என்பதோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டார்.
மாண்புமிகு அமரர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் 2025 ஆம் ஆண்டு தை மாதம் 29 ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது மனைவி பவானி அம்மையாருக்கும், மகன்களான திரு. கலையமுதன் மற்றும் திரு. ஆரா அமுதன், மகள் செல்வி. தாரகா உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவருக்கும், எனது சார்பிலும் திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும் துயர் தோய்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.