வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல், குளியாப்பிட்டி – மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வான் ஒன்று உந்துருளியுடன் மோதியதைத் தொடர்ந்து, உந்துருளி எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
குளியாப்பிட்டியில் இருந்து மாதம்பே நோக்கிப் பயணித்த வான், அதே திசையில் சென்ற உந்துருளியை முந்த முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால், எதிரே வந்த பேருந்துடன் உந்துருளி மோதியதில், உந்துருளி ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
இருவரும் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், உந்துருளி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.