யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே இன்று (6)முற்பகல் 11.00 மணியளவில் முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் பொதுச்சபை செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்வதாக ஒரு தீர்மானத்தை இந்த ஆண்டு நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்திற்கு பின்பு குறித்த பிரதேசத்தில் உழவியந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தவர்களை அதிகாரிகளின் உதவியுடன் சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் அகற்றி வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களாக செம்பியன்பற்று கடற் பிரதேசத்தில் சிலர் உழவு இயந்திரம் கொண்டு மீண்டும் கரைவலை தொழிலை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பொலிஸார், நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுடன் குறித்த கரைவலை வாடிகளுக்கு இன்று விஜயம் செய்தனர்.
இதன்போது ஆவணங்களை பரிசோதித்த கடற்தொழில் பரிசோதகர் முறையான அனுமதி பெறவில்லையென்பதனை சுட்டிக் காட்டியதுடன் கடற்தொழில் சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய உடனடியாக குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்ய முடியாதென தெரிவித்தார்.
மேற்கொண்டு இந்த பிரதேசத்தில் உழவு இயந்திரம் பாவித்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தால் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறித்த பரிசோதகர் எச்சரித்தார்.
உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கடற்தாவரங்கள் அழிந்து வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரைவலை தொழிலாளர் ஒருவர்,
கடந்த ஐந்து வருடங்களாக செம்பியன்பற்று பகுதியில் இதே கடல் தொழிலாளர் சங்க நிர்வாகம் எங்களை உழவு இயந்திரம் பாவித்து தொழில் செய்ய அனுமதித்தார்கள்.
ஆனால் திடீரென்று இந்த வருடம் உழவு இயந்திரத்தை பாவித்து தொழில் செய்ய வேண்டாம் இதனால் பாதிப்பு என்று கூறுகிறார்கள்.
அவ்வாறெனில் கடந்த ஐந்து வருடங்களாக ஏன் எங்களை அனுமதித்தார்கள்.
கடந்த வருடங்கள் எங்களிடம் கையூட்டல்களை வாங்கி சென்றவர்கள் இந்த வருடம் நாங்கள் அதை கொடுக்கவில்லை என்பதனால் போலியான விம்பத்தை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
கடற்தொழிலுடன் சம்பந்தமில்லாத நபர்களை கூட்டிக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
எமது கரைவலை தொழிலை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. மனித வலுவை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கின்றது.
ஆகவே தான் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்து வருகிறோம்.
உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வது வடமராட்சி கிழக்கில் செம்பியன்பற்று பகுதியில் மட்டுமல்ல வடமராட்சி கிழக்கின் அதிகளவான பகுதிகளில் உழவு இயந்திரம் பாவித்து தான் தொழில் செய்து வருகிறார்கள்.
இலங்கையில் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் ஒரு கிராமத்திற்கு ஒரு சட்டம் என்றால் அதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது?
நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கூறியது போன்று நாங்கள் உரிய முறையில் அனுமதி எடுத்து உழவியந்திரம் பாவித்து மீண்டும் கரைவலை தொழில் செய்வோம் என தெரிவித்தார்.




