பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை நேற்றைய தினம் (05.06.2025) சிறப்புற நடைபெற்றது.
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு, இறப்பு, விவாக பதிவுகளை மேற்கொள்ளல் மற்றும் முதியோர் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றிற்கான நடமாடும் சேவை இவ்வாறு நடைபெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவையில் விருந்தினர்களாக ப. பிரபாகர் (பிரதிப்பதிவாளர் நாயகம் வடக்கு வலயம் யாழ்ப்பாணம்), ப. சர்மிலன் (கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்), த.வாசுகி (இணைப்பாளர் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் கிளிநொச்சி), உதவி பிரதேச செயலாளர், பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ் நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் சிறந்த சேவையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடமாடும் சேவையில் 57 கோவைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் குறித்த நிகழ்வில் வைத்து 14 பிறப்பு சான்றிதழும், இரண்டு இறப்பு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒரு விவாகப் பதிவும் இடம்பெற்று விவாக சான்றிதழும், முதியோர் அடையாள அட்டைளும் வழங்கி வைக்கப்பட்டது.

