போராளிகள் நலன்புரி சங்கத்தினரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் இணைந்து ஏற்பாடுசெய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 51 வது நினைவு தினம் நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் போராளிகள் நலன்புரி சங்க ஊடக பேச்சாளர் செல்வரத்தினம் தனுபன் தலைமையில் உரும்பிராயில் இடம்பெற்றது.
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சிலைக்கு முன் ஈகைச்சுடர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி பொன் சிவகுமாரி ஏற்றிவைக்க தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர் மாலைகளை தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயங்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், மருத்துவ கலாநிதி பரா.நந்தகுமார் ஆகியோர் அணிவித்ததை தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் தீபன் திலீசன் ஆரம்பித்துவைக்க அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் நினைவுரைகளை சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், முன்னாள் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், போராளிகள் நலன்புரி சங்க யாழ்ப்பாணம் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியினர், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழரசு கட்சி பொது செயலாளருமான ஈ.சரவணபவன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், சமூக விஞ்ஞான ஆய்வு மைய நிர்வாக உறுப்பினர்கள், போராளிகள் நலன்புரி சங்க நிர்வாக உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




