வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி மீனவ மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் (05) இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கடற்றொழில் அமைச்சருக்கு ஏற்கனவே தாம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்தும், அது தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் ரவிகரனால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும், கடல்வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான கடற்றொழில் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றது.
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் செயல்கள் கடுமையாக இல்லை. கடற்றொழில் அமைச்சரும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துருந்தும், இதுவரை நிலமைகள் சீராகவில்லை.
மீனவ மக்களோ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவக் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடு உட்பட, தமது அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.
சட்டவிரோதிகள் ஏதேனும் செல்வாக்குகளைப் பயன்படுத்தித்தான் இவ்வாறான அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரோ என்ற ஐயப்பாடு மீனவ மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஏன் எனில் அந்த அளவிற்கு சட்டவிரோத கடற்தொழிலாளர்களால் முல்லைத்தீவு கடல்வளம் சூறையாடப்படுகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தாலும் இத்தகைய சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நாமாவது கட்டுப்படுத்துவோம் என்னும் நோக்கில் முல்லைத்தீவு கள்ளப்பாடுப் பகுதியிலிருந்து மீனவ மக்கள் தாமாக ஒன்றிணைந்து, சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் ஆறு படகுகளைப் பிடித்திருந்தனர். அதன் பின்புதான் கடற்தொழில் திணைக்களமும் இதில் இணைந்துகொண்டது. அதன்பின்னர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேவேளை தமாக இணைந்து இத்தகைய சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாது. கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களமும், கடற்படையும் இணைந்துதான் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் இதன்போது மீனவ மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களமும் தமது ஆளணிப் பற்றாக்குறையை தொடர்ந்து எம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நானும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை எழுத்துமூலமாக கடற்தொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளேன். இதுவரை அந்த ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில் மீனவ சமூகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமில்ல கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டில் ஈடுபடும் திருட்டுக் கும்பல்களின் கொட்டத்தை அடக்கி, சட்டவிரோதிகளிடமிருந்து எமது மீனவ மக்களைக் காப்பாற்றுங்கள் என்றுதான் கேட்கின்றோம்” என்றார்.