பாகிஸ்தானில் சமூக ஊடக பிரபலமான சனா யூசஃப் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
சமூக ஊடக பெண் செயற்பாட்டாளரான சனா, சந்தேக நபரான இளைஞனின் “நட்புக் கோரிக்கையை” நிராகரித்துள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞன் சமூக ஊடக பிரபலமான சனாவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை இரு முறை சுட்டுக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான இளைஞன், சனாவின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் சனாவின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் சனாவின் தந்தை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
“என் மகள் மிகவும் துணிச்சலானவள். ஆனால் அந்த இளைஞன் பற்றி இதற்கு முன்னர் எங்களிடம் கூறவில்லை” என சனாவின் தந்தை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மக்கள் அழுத்தத்தையடுத்து, பொலிஸார் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, 113 கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்து, சந்தேக நபரை கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து சனாவின் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாகிஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.