ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கொள்கை ரீதியான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நிலையில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நேற்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டு இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோர் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர் எனவும், அதற்கு டக்ளஸ் தேவானந்தா தான் நேரடியாக சித்தார்த்தனின் இல்லத்தில் வந்து சந்திக்கின்றேன் எனத் தெரிவித்தாகவும் “சங்கு – சைக்கிள் கூட்டு இன்று டக்ளஸூடன் பேச்சு” என தலைப்பிட்டு தமிழ் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தச் செய்தி போலியானது எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூலூடாக தெரிவித்திருந்தார். இதனால் அந்தச் செய்தி அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சந்திப்பை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்குமாறு சித்தார்த்தன் நேற்று நண்பகல் 12 மணியளவில் தொலைபேசி மூலம் டக்ளஸிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில் குறித்த சந்திப்பை இன்றைய தினம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புக் குறித்து வெளியான செய்திகள் தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஊடகங்கள் வினவியபோது, ”அந்தச் செய்தியை ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்துகொண்டேன். டக்ளஸ் தேவானந்தாவோடு இதுவரை எந்தவித சந்திப்புகளும் இடம்பெறவில்லை. அது ஒரு பரபரப்புச் செய்தி” – என்றார்.
எனினும், ‘டக்ளஸ் தேவானந்தாவுடன் சங்கு – சைக்கிள் கூட்டணி சந்திப்பு’ குறித்து வெளியான செய்தி தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோது, “உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எங்களுடைய (ஈ.பி.டி.பி.) ஆதரவு பெறுவது தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். இது தொடர்பில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடலாம் என்றேன். பின்னர் நேற்று நண்பகல் தொடர்புகொண்டு இந்தச் சந்திப்பைப் பிற்போட்டு இன்று வியாழக்கிழமை நடத்துவோம் என்றார். எனக்கும் அது சரியாகவே தோன்றியது.” – என்றார்.