முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (03.06.2025) இரவு கடல் தொழிலுக்கு சென்ற போது கடலில் அவர்களுடைய வலைகளை விட்டு தொழில் செய்ய முடியாத அளவுக்கு சட்டவிரோத (வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கின்ற) தொழிலாளர்கள் அங்கே கடலில் இருந்த காரணத்தினால் அவர்கள் தங்களது வலைகளை விடுத்து மீன்பிடிக்க முடியாமல் திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மேலும் சில மீனவர்களை அழைத்து அங்கு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு மீன்பிடி படகுகளை கள்ளப்பாடு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள் கடற்கரைக்கு மீனவர்களால் கொண்டுவரப்பட்ட நிலையில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திக்கும் கடற்படையினருக்கும் அறிவித்திருந்த போதும் குறித்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்திற்கு செல்லாத நிலையில் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மீனவர்கள் முல்லைத்தீவு பொலிசாருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்த நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளை தவிர்க்கும் முகமாக ஆறு மீன்பிடி படகுகளையும் 6 மீனவர்களையும் பொலிசார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
சிலாபம் பகுதியில் இருந்து வருகை தந்து முல்லைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இரண்டு மீன்பிடி படகுகளும், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளும், முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளுமாக ஆறு மீன்பிடி படகுகளும், ஆறு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கைதான மீனவர்கள் கள்ளப்பாடு கடற்தொழிலாளர்கள் தங்களுடைய பொருட்களை கொள்ளையிட்டதாக பொய்யான முறைப்பாடுகளை செய்து தப்பித்துக் கொள்ள முயல்வதாகவும், திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை, சம்பவ இடத்திற்கு வரவில்லை என குழப்பமடைந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை முதல் முல்லைத்தீவு மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலர் திரண்டு இருந்தனர்.
இந்நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை குறித்து குறித்த சட்டவிரோத மீனவர்கள் ஆறு பேரையும் கைது செய்து ஏனைய விடயங்களில் சமாதானத்தை பேணுவதற்கான பிணைப்பொறுப்பு (81) கீழ் இவர்களை முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் குறித்த ஆறு மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பதற்கான உபகரணங்கள், பட்டறி லைட் போன்ற பொருட்கள் காணப்பட்டதோடு குறித்த நபர்களுக்கு எதிராக மீன்பிடித் திணைக்களத்தினர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது விடயமாக முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் அவர்களை கேட்டபோது நேற்றைய தினம் வேறு ஒரு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இருந்த நிலைமையினால் குறித்த இடத்திற்கு செல்ல முடியவில்லை எனவும் பொலிசார் தொடருகின்ற வழக்கினை தொடர்ந்து தாங்கள் குறித்த நபர்களை கைது செய்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்திருந்தார்.




