எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட உள்ளனர். இதற்காக கல்வியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க ஏற்பாடு செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரை நேற்று (03) செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த இம்ரான் எம்.பி இது தொடர்பான மகஜர் ஒன்றைக் கையளித்தார். 7ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகும். வழமையாக வெள்ளிக்கிழமை மாலை வரை கல்விக் கல்லூரிகளில் போதனை செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதன் பின்னர் தூர இடங்களுக்குச் செல்லும் ஆசிரியர் பயிலுனர்களால் அவர்களது இருப்பிடங்களுக்குச் செல்வதில் இடர்பாடுகள் உள்ளன.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு கல்வியற் கல்லூரிகளின் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க ஏற்பாடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை செவிமடுத்த பிரதமர் உரிய அதிகாரிகளோடு கலந்துரையடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.