“வறிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மேலதிக சேவைகளை வழங்க சாலைகளுக்கு புதிய பேருந்துகள் பெற்றுக் கொடுக்கப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
செட்டிகுளம், பீடியாபாம் பகுதியில் இருந்து இ.போ.சபை பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்த பின் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா, செட்டிகுளம், பீடியாபாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளர்கள், தோட்டச் செய்கையாளர்கள் ஆகியோர் செட்டிகுளம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக பீடியாபாம் பகுதியில் இருந்து காலை 6.45 இற்கு புறப்படும் வகையில் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்கு செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இது மக்களுக்கான சேவை. எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை வறிய மக்களுக்கான சேவைகள் இடம்பெறும்.
எதிர்காலத்தில் இவ்வாறான மேலதிக சேவைகள் இடம்பெறும். சாலைகளுக்கு மேலதிக பேருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும். மக்களுக்கு முன்னுரிமையளித்து எமது வேலைகள் இடம்பெறும். போக்குவரத்து அமைச்சர் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.



