காசாவில் உணவுவிநியோக நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவு ஆதரவு அமைப்பு விநியோகிக்கும் உணவுப்பொருட்களை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஃபாவின் வடமேற்கே உள்ள அல்-மவாசி பகுதியில் உள்ள அல்-ஆலம் சுற்றுவட்டத்தில் விடியற்காலையில் இருந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் .என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காசாவின் சுகாதார அமைச்சு 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
நாசர் மருத்துவமனையின் இயக்குநரும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் உடல்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தேகநபர்கள் தங்களை நோக்கி வருவதை அவதானித்த பின்னர் இஸ்ரேலிய படையினர் உணவு விநியோக மையத்தை நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
படையினர் முதலில் முன்னெச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர் ஆனால் அவர்கள் விலகிச்செல்லவில்லை பின்னர் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தேகநபர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
படையினரை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களால் படையினருக்கு ஆபத்து காணப்பட்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபகுதியில் இஸ்ரேலிய படையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.