“இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்கிடையில், கொவிட் புதிய திரிபும் பரவி வருகின்றது. இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு அரசிடம் எந்த முன்னாயத்தத் திட்டங்களும் இல்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் வெளியிட்டுள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“தற்போது நாட்டில் பல்வேறு மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் 180 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியசாலை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடங்குகின்றன. இது தொடர்பில் நாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதிலும், அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை.
எல்.பி. 8.1 எனப்படும் கொவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றது. இந்தத் துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்தவித பரிசோதனைகளும் நடைபெறுவதாகக் காண முடியவில்லை. இந்தத் துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலைமையில் தற்போது சின்னம்மை நோயும் அதிகரித்துள்ளது. இந்த நோய்க்கு ஆகக் குறைந்தது 6 வாரங்களாவது தொடர்ச்சியாகச் சிகிச்சையளிக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றுள்ளது.