மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மகப்பேற்று விடுதி இயங்காமல் காணப்படுகின்றது.
இதனால் அப்பிரதேசத்தில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சணைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும், சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருமான சி.சிவலக்சன் என்பவரால் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இன்று (02) திங்கட்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் திலக்சன் என்பவரால் வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியினை நேரடியாக பார்வையிட்டு மகப்பேற்று விடுதியினை மீள இயக்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கபட்டது.
இவ் வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி மீண்டும் இயங்குவதற்கு தன்னாலான முயற்சிகளை கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும், பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியருமான சி.சிவலக்சன் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
