ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (02) மாலை இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுச்சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
ஜனநாயக தேசியக் கூட்டணியானது கடந்த தேர்தலில் வவுனியாவில் ஐந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. அந்தவகையில் வவுனியா மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பரமேஸ்வரன் கார்த்தீபன்,செட்டிகுளம் பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சங்கரன் சசிக்குமார், இராசரத்தினம் லிங்கேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரசிங்கம் ஶ்ரீதரன் மற்றும் சதாநந்தம் சுகிர்தன் ஆகியோர் தமது சத்தியப் பிரமாணத்தை இன்று மேற்கொண்டனர்.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசாவின் முன்னிலையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருத்தனர்.

