யாழ் வடமராட்சிக் கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்களினால் இன்று (29) சமூக மாற்றத்துக்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்று நிகழ்த்தப்பட்டது.
இதில் கட்சியின் போணஷ் ஆசனம் பகிர்ந்து அளிக்கப்பட்ட விதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்த வேட்பாளர்கள் வடமராட்சிக் கிழக்கின் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.
கட்சி பணம் தராத போதிலும் சிறிய தொகை ஒன்றிற்காக பெரிய தொகைக்கான கையெழுத்தை வாங்க முனைந்ததாக இணைப்பாளர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது தொடர்பாக வேட்பாளர்கள் மத்தியில் ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பெண் வேட்பாளர் ஒருவர், “நான் 11 ஆம் வட்டாரத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்டேன். எனக்கு கட்சியில் இருந்து எந்த ஒரு நிதியும் வரவில்லை. எனது தேர்தல் செலவுக்காக 600 ரூபாய் தான் இணைப்பாளரால் தண்ணீர் போத்தலுக்கு வழங்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் 600 ரூபாய் செலவிற்காக தந்துவிட்டு 60,000 ரூபாவிற்கான பத்திரத்தில் கையொப்பமிடுமாறு என்னிடம் கையெழுத்து வாங்க முனைந்தார். இல்லாவிடில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வருமெனவும் எச்சரித்ததாகவும் தான் கையெழுத்திடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த சக வேட்பாளர்கள்,” வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களை நிறுத்துவதற்காகத்தான் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி காணப்படுகின்றது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை, எங்களுடைய முறைப்பாடுகளை கட்சியினுடைய இணைப்பாளருக்கு பலமுறை தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லை.
ஊழலை ஒழிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததாக கூறினார்கள். ஆனால் இங்கு ஊழல்வாதிகளுடனும், மணல் கடத்தல் காரர்களுடனும், சட்டவிரோத தொழிலாளர்களுடனும் வடமராட்சிக் கிழக்கு அமைப்பாளர் தொடர்பில் இருக்கிறார். இதனால் சட்டவிரோத செயற்பாடுகளை வடமராட்சிக் கிழக்கில் நிறுத்த முடியவில்லை.
அமைப்பாளருடன் இணைந்து பயணித்தவர்களாக நாம் இதனை கூறுகிறோம். இன்று எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் கட்சி கவனம் எடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாம் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறுவோம்” என மேலும் தெரிவித்தனர்.